Friday, June 06, 2008
79. படார் வெடிகளும் பாத்ரூம் சங்கதிகளும் !
மேளங்கள் முழங்கட்டும், தாரை தப்பட்டைகள் தெறிக்கட்டும், படாரென வெடிக்கட்டும், என் ஆருயிர் தமிழே, உன்னில் எழுதாமல் இருந்தமைக்கு என்னை மன்னிப்பாயாக!

படார் வெடிகளென்றதும் என் வாழ்வில் நடந்தவைகள் நினைவுக்கு வருகின்றன. எனக்கும் வெடிகளுக்கும் அப்படி ஒரு பிரமாதமான உறவு. பத்தாம் வகுப்பில் கன்னியாகுமரியில் தென்னையும், மாமரங்களும் சூழ்ந்த பண்ணை வீட்டில் வசித்து வந்தோம்.

தீபாவளியை முன்னிட்டு நானும் எனது நண்பனும் லக்ஷ்மி வெடியை யார் வீட்டில் கொளுத்தி எறியலாமென்று தர்க்கம் செய்து கொண்டிருந்தோம். எனது நண்பனும் கர்மசிரதையாக "மச்சான் லக்ஷ்மிய உரசினா சும்மா ஜிவ்வுனு ஏறும்டா" என்று கூற, அவ்வழியே சென்ற வேலைக்காரி - கேரளத்து பெண்குட்டி லக்ஷ்மி அதை எசகுபிசகாய் புரிந்து கொண்டு " எந்தடா பறஞ்சது காலண்டமோனே நின்ன சவுட்டி கொல்லும்" என்று அங்காளபரமேஸ்வரி போல துடப்பதை எடுத்து கொண்டு வர எனது பிரும்மாஹத்தி நண்பனும் அரைகுறையான மலையாளத்தில் " அதல்லே ஞான் பறஞ்சது லக்ஷ்மி அல்ல ஒமனையே" என்று உளறி கொட்டினான். அந்த மூதேவி அதற்கு தமிழிலேயே சொல்லிதொலைதிருக்கலாம் - நான் உரச போவது லக்ஷ்மி வெடிய, அதுவும் இங்க இல்ல அந்த வீட்டுல என்று ". இவன் சொன்னதை அவள் மேலும் விகாரமாய் புரிந்து கொண்டு " எந்தடா பறஞ்சது ஞான் அல்ல என்ட அம்மே ஒமனயோ?" என்று துடப்பத்தால் நன்கு வெளுக்க, வில்லனால் ரேப் செய்யப்பட்ட ஹீரோயின் போல அலங்கோலமாய், என்ன எழவு இது என்று நானும் என் நண்பனும் தப்பித்து வருவதற்குள் ஒரு வழியாயிற்று.

எழவு என்றதும் ஒரு சம்பவம் நினைவிற்கு வருகிறது, ஒரு முறை நண்பன் ஒருவனின் தாத்தா இறந்து விட துக்கம் விசாரிக்கும் பொருட்டு நானும் பத்தில் ஒருவராய் சென்றிருந்தேன் அவரவர் அந்த கால நினைவுகளை கூற அதற்கு நண்பனின் பாட்டியும் "ஆமாம் இவர் கூட அப்படிதான்" என்று கூறி பிழிய பிழிய அழுது கொண்டிருந்தார்.

ஒரு மாமா - " இப்படித்தான் நானும்,சுப்பியும்(தாத்தாவின் பெயர்), சோமுவும் அந்த காலத்திலே ஒண்ணா படிச்சோம்! சோமுவுக்கு நல்லா கர்லாகட்டை மாதிரி ஒடம்பு" என்று கூற, பாட்டி "இவர் கூட அப்படிதானே, சும்மா எம்.ஜி.ர் கணக்கா இருப்பாரே, என்னை விட்டுட்டு போய்ட்டேளேனா!" என்று ஒப்பாரியை ஆரம்பித்தார்.

என் நண்பன் நெட்டி இடித்தவாறு என் காதில் கிசுகிசுத்தான் -"மச்சான் நீ இத கண்டுக்காத, இதையெல்லாம் கேட்ககூடாதென்றுதான் எம்.ஜி.ர் எங்க தாத்தாக்கு முன்னாடியே நல்லவேளையா செத்துப்போய்விட்டார்"

சிறிது நேரத்தில் இன்னொரு மாமா - " நானும், சுப்பியும், ராமுவும் ஒண்ணா கல்லூரிக்கு நடந்தே போவோம் இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு" என்று கூற, உடனே பாட்டி, " இவர் கூட கடைசிவரைக்கும் அப்படித்தானே, தெருவுல நடக்கும்போது, பெருமாளே, நடந்துபோறா மாதிரி இருக்குமே, என்னை விட்டுட்டு போய்ட்டேளேனா!" என்று மீண்டும் ஒப்பாரியை ஆரம்பித்தார்.
உடனே என் நண்பன் என் காதில் கிசுகிசுத்தான் "மச்சான் நீ இத நம்பாத, என் தாத்தா சரியான கஞ்சம்டா, இப்பகூட வைகுண்டத்துக்கு நேரா நடந்தே போயிருப்பாருந்தான் நினைக்கிறேன்!"
எழவு வீடாயிற்றேயென நானும் பல்லை கடித்துக்கொண்டு சிரிப்பை அடக்க பிரம்ம பிரயத்தனம் செய்ய, கடைசியாய் ஒரு மாமா "இப்படித்தான் நானும்..." என்று ஆரம்பித்த வேகத்திலேயெ, இரும தொடங்கி, காலையில் அவர் சாப்பிட்ட பருப்பு வடையும் வேலை செய்ய, டர்ர்ர்ர்ர்ர், புர்ர்ர்ர்ர்ர் என்று விட்டு காற்றின் சூழலை அதிரவைத்தார்.

இதுவரை சும்மா இருந்த நண்பன் வீட்டு வாண்டு ஒன்று, " இவர் கூட இப்படித்தான் அந்த காலத்திலேயெ இப்படி டர்ர்ர்ர்ர்ர், புர்ர்ர்ர்ர்ர்ரென விடுவாறே, எங்கள தனியா தவிக்க விட்டுட்டு போய்ட்டியே தாத்தா" என்றுடைக்க, அதற்கு மேல் தாங்க முடியாமல் நான், வெடிச்சிரிப்பு சிரிக்க என்னோடு சேர்ந்து பாட்டி உட்ப சிரித்ததில் எழவு வீடே கலகலப்பானது!

டர்புர் சங்கதியில் நாம்தான் இப்படியென்றால், வெள்ளையர்களும் இதற்கு சளைத்தவர்களில்லை - அமெரிக்காவில் நான் இருந்த சமயத்தில் நடந்த அனுபவம். அமெரிக்கர்கள் சற்று விவஸ்தைகெட்டவர்களே! அங்கே பெரும்பாலான டாய்லெட்டுகளுக்கு கதவு முக்கால் அளவே இருக்கும், இப்படித்தான் முதல் முறை நான் ஒரு கழிப்பறையில் நுழைந்தபோது, ஒரு வெள்ளைக்கார மாமா, கரடிக்குட்டிக்கு தம்பி போல காலெல்லாம் ரோமங்களுடன் கழிவறையில் அமர்ந்திருந்தார். சும்மாயில்லாமல், "ஓ யா! இம்..ஓ யா!" என்று பாட்டை வேறு முனுமுனுத்து கொண்டிருந்தார். என்ன கருமாந்திரமடாயிது என்று நொந்தவாறே நான் என் நண்பணிடம் விசாரிக்கையில் அவன் அதற்கு, "டேய் மக்கு, அமெரிக்க காட்டானுங்க, முக்கால்வாசி நேரம் இலையும் தழையும் தின்பதனால், சரியாக போக முடியாமல், கஷ்டப்படுவார்கள்! அந்த நேரத்தில் முக்குவது வெளியே தெரிய கூடாது என்பதால், இப்படி பாட்டு பாடுவது அவர்கள் வழக்கம்".

இதுபோல் நானும் எனது இரு நண்பர்கள் இருவரும், ஒருமுறை, அலுவலகத்தில், கழிப்பறையில் நுழையும் நேரம் ஒரு க்ளையண்ட் மாமா, டர் டர், புர் புர், டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என வெளுத்து வாங்கி கொண்டிருந்தார். உள்ளே நுழைந்த வேகத்திலேயெ, நாங்கள் மூவரும் வெளி வர , என் நண்பன் கிண்டலடித்தான் " பாம் ஒன்று, செயல் மூன்று!!!" . வாழ்க்கையின் மறக்க முடியாத வெடிச்சிரிப்பிற்கு, இந்த சரவெடிகள் காரணமாகிவிட்டன!

Labels:

 
posted by Prasanna Parameswaran at 10:27 AM |


5 Comments:


At 8:52 PM, Blogger Jeevan

"வாண்டு ஒன்று, " இவர் கூட இப்படித்தான் அந்த காலத்திலேயெ..." உச்சகட்டம் ஹ ஹ ஹ ....

எனக்கு பிரச்சனை இல்லை இங்க நான் சிரிச்சிகிட்டே இருக்குறேன் :)

 

At 8:56 AM, Blogger Maayaa

u r tagged!!

 

At 8:43 AM, Blogger BV

Excellent comedy prasanna...
I couldnt control my laughther.
வாய் விட்டு சிரிச்சேன், ரொம்ப நாளைக்கப்பறம்

 

At 9:53 AM, Blogger Prasanna Parameswaran

balu and jeev - glad u enjoyed it, nagaichuvaingardhu namma suthi nadakkara vishayangaleye irukku, enna naama dhaan adha notice panradhilla

priya - thanks for tagging me, i will respond to your tag soon

 

At 3:20 PM, Blogger Unknown

[:D] .. man real funny post.. I was laughing out aloud after readin the omane adventure... Great !! :)