அகங்காரமாய் இட்லியை மறுத்த உதடு,
இன்று அலங்கோலமாய் ப்ரெட்டை குதப்பியதேனோ,
சில நேரம் கடமைக்காக,
சில நேரம் கனவுகளுக்காக -
தொழில்நுட்பம் என்று பிதற்றி
உறவுகளின் நுட்பத்தை உதறி விட்டேனோ?
சூரிய வெளிச்சத்தை பார்த்துவிட்டு,
அறைக்குள் திரும்புகையில் - கண்கள் இருண்டதைப்போல,
கணிணித்திரையை பார்த்திவிட்டு,
வீடு திரும்புகையில் - நட்பும் உறவும் இருண்டதேனோ?
மனைவியின் தலையில் மல்லிகைச் சரத்தை ஸ்பரிசித்ததை விட,
மலர்மாலையை "போடோஷாப்"-பில் அலங்கரித்ததே அதிகம்!
பிள்ளையின் பிஞ்சு விரல்களை உச்சி முகர வேண்டிய என் உதடு,
முகம் தெரியாத client-இற்காக, போலியாய் நாள் முழுவதும் சிரிக்கிறதே,
"ஆரிராரோ என் கண்ணே நீ உறங்கு" என்று என் கழுத்தில் ஒற்றை டாலரைக் கட்டி மனமுழுவதும்
மகிழ்ச்சியுடன் என்னைத் தாலாட்டிய என் தந்தையின் முகம் எங்கே,
"abn-amro"-வில் ஆயிரமாயிரம் டாலரைக் குவித்தும்,
விட்டத்தை வெறித்து நோக்கும் என் முகம் எங்கே!
"கடா வயசார்து, இன்னும் அம்மா மடி வேணுமா, இரு உனக்கு ஒருத்தியை கட்டி வெக்கறேன்"
என்று செல்லமாய் கோபிக்க, அந்த சுகமான வருடலில் அன்று - உறங்கிய நான் எங்கே?
laptop-ப்பை கட்டிக் கொண்டு, பஞ்சு மெத்தையில்
புரண்டு புரண்டு தவிக்கும் இன்று - கிறங்கும் நான் எங்கே?
வயிற்றுக்காக உறவுகளை விட்டு வெகுதூரம் வந்தேன்,
வசதிக்காக குடும்பத்தை விட்டு வெகுதூரம் வந்தேன்,
வாழ்க்கைக்காக நட்பை விட்டு வெகுதூரம் வந்தேன்,
இத்தனை தூரம் வந்து களைத்த என்னிடம் - மனம் கொக்கரித்தது
"பைத்தியக்காரா! இதற்காக இவ்வளவு தூரம் வந்தாயே -
அன்பிற்காக இனி எங்கு செல்வாய், உலகம் உருண்டையடா,
கிளம்பிய இடத்திற்கே திரும்பிச் செல்!!!!"